top of page

அதிபராக விரும்பும் இங் பிரசாரம்: கொள்கைகளை வகுப்பவர் தர்மன்; அவற்றைப் பணமாக்குவது நான்


தேர்தலில் போட்டியிட்டு அதிபராக விரும்பும் திரு இங் கோக் சோங், ஆகஸ்ட் 5ஆம் தேதி தியோங் பாரு உணவு நிலையத்தில் இருந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தலைமை தகவல் அதிகாரிக்கும் தலைமை முதலீட்டு அதிகாரிக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் இடைப்பட்ட அளவுக்குப் பெரும் வேறுபாடு உண்டு என்று அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் திரு இங் கோக் சோங் தெரிவித்தார்.


தலைமை முதலீட்டு அதிகாரி என்பவர், ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியைவிட உயர்ந்தவர் இல்லை என்றாலும் அவர் அளவுக்கு முக்கியமானவர்தான் என்று திரு இங் கூறினார்.


அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஜார்ஜ் கோ என்ற தொழிலதிபரும் அறிவித்துள்ளார்.

திரு கோ, வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்த கருத்துகள் தொடர்பில் திரு இங் இவ்வாறு குறிப்பிட்டார்.


“நான் என் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எனும் பட்சத்தில் நீங்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்வராதீர். உங்கள் பதவி ஆக உயர் பதவி அல்ல; உங்கள் இடம் ஐந்தாவதோ ஆறாவதோதான்,” என்று திரு கோ கூறி இருந்தார்.


திரு இங், 75, சனிக்கிழமை தியோங் பாரு சந்தைக்குச் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.


ஜிஐசி என்ற அரசாங்க நிறுவனத்தில் முதலீட்டுத்துறை அதிகாரியாக சேவையாற்றி இருக்கும் திரு இங், நாம் இருவரும் ஒரு காப்பிக்கடையில் காப்பி குடித்துக்கொண்டே இது பற்றி விவாதிக்கலாம், ஒருவர் மற்றாருவரின் அறிவைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று திரு கோவுக்கு அழைப்பு விடுத்தார்.


இதனிடையே, திரு இங்கின் ஒளிவழியில் யூடியூப் காணொளி ஒன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.


அதில் பேசிய திரு இங், தானும் முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னமும் ஒரே பின்னணியைக் கொண்டவர்கள் என்றார்.


இருவரும் சிங்கப்பூர் நாணய ஆணையத்திலும் ஜிஐசி நிதியத்திலும் பதவி வகித்தவர்கள் என்று அவர் கூறினார்.


“ஜிஐசி நிதியத்தில் நான் தலைமை முதலீட்டு அதிகாரியாக இருந்தபோது நிர்வாக சபையிடம் பரிந்துரைகளைத் தாக்கல் செய்தேன்.


“அந்தச் சபைதான் முதலீடு, நிறுவன அமைப்புமுறை தொடர்பான கொள்கைகளை அங்கீகரிக்கும்.

“அந்தச் சபையில் திரு தர்மனும் இருந்தார். கொள்கைகளை நிர்வாக சபை அங்கீகரித்த பிறகு அவற்றை நான் நிறைவேற்ற வேண்டும். கொள்கைகள் பலன்களை உருவாக்கித் தருமாறு செய்வது என் பணி.


“அதாவது முதலீட்டு நிர்வாக அமைப்பைப் பொறுத்தவரை திரு தர்மன் கொள்கைகளை உருவாக்குபவர். நான் பணத்தை உருவாக்குபவர்,” என்று திரு இங் குறிப்பிட்டார்.


சிங்கப்பூரின் சேமிப்புதான் சிங்கப்பூர் நாணயத்தை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. அந்தச் சேமப்பைப் பாதுகாப்பதில் அதிபருக்கு மிக முக்கிய பொறுப்பு இருக்கிறது என்று திரு இங் தெரிவித்தார்.


இளையர்களை எட்டி தியானம் போன்றவற்றை அவர்களுக்குப் போதித்து அதன் மூலம் இளையர்கள் மன உளைச்சலைச் சமாளிக்க உதவப்போவதாகக் கூறிய திரு இங், பலவற்றையும் பற்றி அதிகம் தெரிந்து வைத்து இருக்கும் இளையர்கள் கூச்ச சுபாவத்தைக் கைவிட்டு தைரியமாக பேச முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


bottom of page